Header Ads

தனிக்குடித்தனம்



"அப்பா, இந்தப் பணத்தை என்ன செய்யப் போறீங்க" என்றான் அவருடைய மூத்த மகன் ரகு.

ராமநாதன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு அலுவலகத்திலிருந்து வரவேண்டிய பணம் எல்லாம் கைக்கு வந்து சேர்ந்தது.

"இன்னும் அதுபத்தி யோசிக்கலை. கொஞ்சம் கடன் இருக்கு. முதல்ல அதைக் கொடுக்கணும். ஏன் எதுக்கு கேக்கற" என்றார்.

"இப்ப நான் வீடு கட்டிட்டிருக்கேன்... உங்களுக்கும் தெரியும். போட்ட எஸ்டிமேட்டை விட அதிகமாகிடும் போலிருக்கு. ஆபிஸ்ல போட்ட லோன் பத்தாது. அதனால..."

"அதனால.."

"உங்ககிட்ட இருக்கிற பணத்தைக் கொடுத்து உதவி செஞ்சீங்கன்னா நல்லாருக்கும். நீங்களும் ரிடையர் ஆகிட்டீங்க. அங்கே இங்கேன்னு அலையாம எங்க கூடவே தங்கிடுங்க. உங்களுக்குன்னு தனியா ஒரு ரூம் போட்டுக் குடுத்துடுறேன்..." என்று ரகு சொல்ல, ராமநாதன் யோசித்தார்.

"நீ சொல்றது வாஸ்தவம்தான். ரெண்டு பிள்ளைங்க இருக்கீங்க. உங்கிட்ட கொஞ்ச நாளும் சின்னவன் சேகர்கிட்ட கொஞ்ச நாளும் இருந்து அப்படியே என் ரிடையர்ட் லைஃபை தள்ளிடலாம். ஆனால் பணம் எல்லாத்தையும் உனக்குக் கொடுத்திட்டா தம்பி கேப்பானே..." என்றார்.

"சேச்சே மாட்டான்பா. அவன்கிட்ட பேசிட்டேன். இப்போ எனக்கு பணம் வேணாம். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சிதான் நான் வீடு கட்டப்போறேன். அந்தச் சமயம் கொடுத்து உதவினா போதும்னுட்டான்."

"அப்படின்னா சரி... உன்கிட்டயே கொடுத்துடறேன், நல்லபடியா வீட்டை கட்டி முடி..."

கோயிலுக்குப் போயிருந்த அவருடைய மனைவி கல்யாணி வந்தாள். பெரிய மகன் கேட்டதைச் சொன்னார். கல்யாணியும் அதிகம் யோசிக்கவில்லை.

"அதனால என்னங்க பணத்தைக் கொடுத்திடுங்க. நம்ம கடமையை முடிச்சிட்டோம். ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிச்சிட்டோம். ரெண்டு பேரும் நல்லவிதமா செட்டிலாயிட்டாங்க. நமக்கு ஏதாவது ஒண்ணுன்னா பிள்ளைங்க பார்த்துக்கப் போறாங்க" என்றாள்.

பெரிய மகனும் மருமகளும் பூரித்துப் போனார்கள். பணம் கேட்டதும் எந்தத் தடையும் சொல்லாது இருவருமே சந்தோஷமாக கொடுக்கிறார்களே என்று. இந்த மாதிரி மாமனார்- மாமியார் கிடைப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற சந்தோஷம் மருமகளுக்கு.

அப்படி இப்படி என்று ஒரு வருட காலம் ஓடிவிட்டது. ரகுராமன் வீடு கட்டி முடித்துவிட்டான். தம்பிக்கு கொடுக்க வேண்டிய பங்கு பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துவிட்டான். அம்மாவும் அப்பாவும் மூத்தவன் ரகுராமன் வீட்டிலேயே தங்கியிருந்தார்கள், இருக்கிறார்கள்.

ஒருநாள்-

ரகுராமனிடம் அவன் மனைவி கேட்டாள். "என்னங்க... உங்க அம்மாவும் அப்பாவும் ஏன் நம்ம வீட்டிலேயே இருக்காங்க"

"என்ன கமலா இப்படி கேக்கற பிள்ளை வீட்ல இல்லாம பெத்தவங்க வேற எங்க போவாங்க நாம வீடு கட்ட பணம் குடுத்து உதவி பண்ணியிருக்காங்க. வயதான காலத்தில அங்க இங்கன்னு அலைய வேணாம்னு நாமதான நம்ம வீட்லேயே ஒரு ரூம் போட்டுக் குடுத்தோம். இப்ப போய் அவங்க ஏன் நம்ம வீட்ல இருக்கணும்னு கேக்கற" என்றான் சற்று கோபமாக.

"ரிடையர் ஆனதும் கெடைச்ச பணத்தை நமக்கு மட்டுமா கொடுத்தாங்க அதுல பாதியை உங்க தம்பிக்குக் கொடுத்துட்டீங்களே... எல்லா பணத்தையும் நாம மட்டும் அனுபவிக்கலையே... அப்பிடின்னா, பெத்தவங்களை வச்சி காப்பாத்துற பொறுப்பு உங்க ரெண்டு பேருக்கும் இருக்கில்ல"

"என்ன கமலா, இதுக்கெல்லலம் போய் கணக்கு பாக்கறே..."

"அதுக்காக சொல்லல...."

"நீ எதுக்காகவும் சொல்ல வேணாம். ஓய்வு காலத்தை அவங்க ஒரே இடத்துல இருந்து நிம்மதியா வாழட்டும். இங்க கொஞ்ச நாளும் தம்பிகிட்ட கொஞ்ச நாளும் அலைய விட வேணாம்.." முடிவாகச் சொன்னான் ரகு.

"இதோ பாருங்க, உங்கப்பாவுக்கு ஒரு மாதிரியாகவும் உங்கம்மாவுக்கு ஒரு மாதிரியாகவும் விதம்விதமா சமைச்சிப் போட என்னால முடியாது. உங்க தம்பியும் தம்பி பெண்டாட்டியும் மட்டும் ஜாலியா லைஃபை என்ஜாய் பண்ணுவாங்க. இங்க நான் மட்டும் காலத்துக்கும் இவங்களுக்கு வடிச்சி கொட்டிக்கிட்டு இருக்கணுமாக்கும்.." என்று முகத்தை வெடுக்கென்று திருப்பி தோளில் இடித்து தன் வெறுப்பைக் காட்டினாள்.

ரகு முறைத்ததை லட்சியம் செய்யாமல் அவள் தொடர்ந்தாள்.

"இல்லேன்னா ஒண்ணு செய்யுங்க. ரெண்டு பேர்ல ஒருத்தர் இங்க இருக்கட்டும். ஒருத்தர் தம்பி வீட்டுக்குப் போகட்டும்..." என்று முடிவாக சொல்லிவிட்டுப் போனாள் கமலா.

தன் தர்மசங்கடமான நிலைமையை எண்ணி இரவு அவனுக்கு சரியான உறக்கமில்லை.

மறுநாள் காலை அலுவலகம் புறப்படுவதற்கு முன், அப்பா முன் போய் நின்றான் ரகு. அப்பா பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். "அப்பா" என்று கூப்பிட்டவன் மேலும் பேச வார்த்தையைத் தேடினான். தொண்டை வரை வந்த வார்த்தைகள் வெளிவரத் தயங்கின.

"என்ன ரகு.." பேப்பரிலிருந்து பார்வையை எடுக்காமல் கேட்டார். மேலும் அவன் ஏதும் பேசாமல் தயங்குவதைப் பார்த்து, தானே பேசினார்.

"நீ ஏன் இப்படி தயங்குறேன்னு தெரியும். நேத்து நீயும் உன் மனைவியும் பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டேன். உங்களுக்கு பாரமா இருக்க விரும்பலை..."

"அப்பா... இதுல எனக்கு விருப்பமில்லை. அவதான்... நீங்க ஒண்ணும் இதை மனசில வச்சிக்காதீங்கப்பா..." என்ற மகனை கையால் செய்கை காட்டி தடுத்தார்.

"யாரையும் நான் தப்பா நினைக்கல. உன் மனைவி சொல்றதிலேயும் காரணம் இருக்கு. என்கிட்ட இருந்த பணத்தை உனக்கு மட்டுமா கொடுத்தேன் தம்பிக்கும் கொடுத்திருக்கில்லே. அப்படினா நாங்க அங்கேயும் இங்கேயும் இருக்கிறதுதான் சரி. அதைத்தான் எங்க மருமகளும் சொல்லியிருக்கு. இதிலென்ன தப்பிருக்கு"

"இல்லேப்பா.. இது எனக்கு சரியாப் படலே.."

"இங்க பாருப்பா ரகு, நான் சொல்றத தெளிவா புரிஞ்சிக்க. எப்ப இப்படியொரு எண்ணம் வந்ததோ, சின்ன விரிசல் விழுந்ததோ, அதுக்கப்புறம் இங்கே பிடிவாதமா இருக்கிறது சரியில்லே. அதேசமயம், கமலா சொல்ற மாதிரி இங்கே கொஞ்ச நாளும் அங்கே கொஞ்ச நாளும் இருக்கவும் பிடிக்கலை. இங்க ஒருத்தரும் அங்க ஒருத்தரும் இருக்கவும் விருப்பமில்லை. கடைசி காலத்துல நாங்க ஒருத்தருக்கொருத்தர் துணையா ஆதரவா இருந்துட்டுப் போறோம். எங்களைப் பிரிச்சிடாதீங்க. அதனால நானும் அம்மாவும் தனியா போறோம்.."

"என்னப்பா சொல்றீங்க.." அதிர்ச்சியாய்க் கேட்டான்.

"ஆமாம்பா ரகு, புதுசா கல்யாணம் ஆனவங்கதான் தனிக்குடித்தனம் போகணும்னு சட்டமோ சம்பிரதாயமோ இல்லை. வயசான காலத்திலேயும் போகலாம். நீ ஒண்ணும் வருத்தப்படாத. ஆபிஸூக்குப் போயிட்டு வா. அப்புறமா பேசிக்கலாம்..."

ரகுராமன் புறப்பட்டான். மனைவி கல்யாணியிடம் நடந்த விபரம் சொன்னார் ராமநாதன்.

"சரிங்க... நீங்க என்ன முடிவெடுத்தாலும் அது சரியாத்தான் இருக்கும். வர்ற பென்ஷன்லே நாம தாராளமா குடும்பம் நடத்தலாம்ங்க.." என்றாள்.

அந்த வாரக் கடைசியில் அவர்கள் தனிக்குடித்தனம் சென்றார்கள்.

No comments

Powered by Blogger.