Header Ads

பட்டியல் தர கமிஷனர் உத்தரவு இன்டர்நெட் மையத்திற்கு வருபவர்கள் யார் யார்?

சென்னை : இன்டர்நெட் மையத்திற்கு வருபவர்கள் யார் யார் என்பது பற்றி மாதந்தோறும் 5ம் தேதி போலீஸ் நிலையத்தில் பட்டியல் கொடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள இன்டர்நெட் மையங்களில் அதிரடியாக சோதனை நடத்தியதில் பல மையங்களில் வருகை பதிவு செய்யப்படவில்லை, கண்காணிப்பு கேமராக்கள் இல்லை என்பது தெரியவந்தது. 


இதையடுத்து இன்டர்நெட் மையங்கள் மூலம் பல குற்றங்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதால், அதை தடுப்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூரில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இன்டர்நெட் மையங்களின் உரிமையாளர்கள், மேலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
பாதுகாப்பு முறைகள் குறித்து கமிஷனர் திரிபாதி பேசியதாவது:


அனைத்து மையங்களிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இல்லையென்றால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். யார் யார் வந்து செல்கிறார்கள், என்னென்ன செய்கிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அனைத்தையும் சேகரித்து வைக்க வேண்டும். அதனை மாதந்தோறும் 5ம் தேதி போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். குற்றங்கள் நிகழ்ந்தால் அந்த மையத்தின் உரிமையாளர்தான் பொறுப்பு. அதனால் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள்.


மாமூல் தொல்லை தாங்க முடியவில்லை


கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் பேசும்போது சிலர் எழுந்து, “மாதந்தோறும் எங்கள் பகுதி இன்ஸ்பெக்டர்கள், சோதனை என்ற பெயரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். முறையான ஆவணங்கள், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திருந்தாலும், அவர்களது தொல்லை பெரும் தொல்லையாக இருக்கிறது’’ என்று குற்றம் சாட்டினர். உடனே அபய்குமார் சிங், அப்படி செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


இன்டர்நெட் மைய நிர்வாகிகள் கூறுகையில், “தவறு நடக்கும் மையத்தை போலீஸ் தான் கண்டுபிடிக்க வேண்டும். அதைவிடுத்து மாதந்தோறும் பட்டியல் கொடுப்பது என்பது முடியாத காரியம். இமெயில் முகவரி கொடுத்தால் பட்டியலை அனுப்பி விடுவோம்’’ என்றனர்.

No comments

Powered by Blogger.