Header Ads

ஒரு நிஜ ஹீரோ

‘டைகர்’ மன்சூர் அலிகான் பட்டோடி. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன். கங்குலி, டோனி பிறப்பதற்கு முன்பாகவே. வெளிநாட்டிலும் நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை நம் வீரர்களின் மனதில் விதைத்தவர். மன்னர் பரம்பரையில் பிறந்தவர் என்பதாலோ, அப்பா இப்திகார் இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் விளையாடியவர் என்பதாலோ அல்லாமல் திறமையால் சாதித்தவர். கார் விபத்தில் ஒரு கண் பார்வையை இழந்த பிறகும், மனம் தளராமல் களமிறங்கி கலக்கியவர்.

மிக இளம் வயதில் (21) கேப்டன் பதவி இவரை தேடி வந்ததற்கும் ஒரு காயம்தான் காரணம். பார்படாஸ் டெஸ்டில் கிரிபித் வீசிய பவுன்சரில் கேப்டன் கான்ட்ராக்டர் மண்டை உடைய, பட்டோடி தலையில் பொறுப்பு சுமத்தப்பட்டது. கொஞ்சமும் அசராமல், தனது தனித்துவமான செயல்பாட்டால் கேப்டனாக தனி முத்திரை பதித்தார். சக வீரர்களுக்கிடையே எந்த வித சர்ச்சைக்கும் இடம் கொடுக்காதவர். 

ஒரு போட்டியில், வெஸ்ட் இண்டீசின் ஆண்டி ராபர்ட்ஸ் வேகம் இவரது தாடையை பதம் பார்க்க, அடுத்து ஹோல்டர் வீசிய ஓவரில் அனாயசமாக சிக்சர் விளாசியதை கிரிக்கெட் பிரபலங்கள் இன்றும் பிரமிப்புடன் நினைவுகூர்கிறார்கள். அத்தனை மன உறுதி. பேட்டிங்கில் மட்டுமல்ல, பந்தை பாய்ந்து தடுப்பதிலும் கில்லாடி. அதற்காக கிடைத்ததுதான் டைகர் பட்டம். 

சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 128 ரன் விளாசிய ஆட்டம் ரொம்பவே ஸ்பெஷல் என்று அவரே சொல்லியிருக்கிறார். களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேயும் ஹீரோவாக ஜொலித்தவர். ரேமண்ட்ஸ் விளம்பரத்தில் இவரை யார் என்றே தெரியாதவர்கள் கூட, அவரது மிடுக்கான தோற்றத்திலும் நடையிலும் மனதை பறிகொடுத்ததை மறுக்க முடியுமா? 70களில் ரசிகைகளை அதிகம் கவர்ந்த கிரிக்கெட் வீரர் இவர்தான். கிரிக்கெட்டின் முதல் ஸ்டைல் மன்னன். இவரது ஆட்டத்திலும் அழகிலும் மயங்கி கை பிடித்தவர்தான் பாலிவுட் கனவுக் கன்னி ஷர்மிளா தாகூர்.

வர்ணனையாளர், நடுவர், சிறந்த நிர்வாகி என்று பன்முகத் திறன் காட்டி பலருக்கும் முன்னோடியாக விளங்கியவர். அரசியலில் அடி சறுக்கினாலும், ரசிகர்களுக்கு என்றுமே நவாப்தான். அவரது மறைவு கிரிக்கெட் உலகில் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments

Powered by Blogger.