லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை:
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின் போது சிங்கள ராணுவம் ரசாயன கொத்துக் குண்டுகளை வீசி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்தது. இந்த கொடூர தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாரும் தப்பவில்லை.
மனித உரிமைகளை மீறும் வகையில் சிங்கள ராணுவம் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி விசாரித்து இலங்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை போர்க்குற்றம் பற்றி புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசு தாங்கள் ஒருபோதும் போர்க் குற்றத்தில் ஈடுபடவில்லை என்று மறுத்தது.
போரின் போது தங்களுக்கு மிகவும் உதவியாக இருந்த ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவை நாடி யது. இந்நிலையில் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தது.
இந்த தீர்மான நகல் ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 47 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் கருத்துக்களுடன் இந்த தீர்மானத்தின் மனித உரிமைகள் குழு கூட்டத்தில் விவாதமும் பின்னர் வாக்கெடுப்பும் நடைபெறும்.
அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் திடீரென இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ததால் இலங்கை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அதிபர் ராஜபக்சே போரின்போது தங்களுக்கு ஆயுத உதவிகள் செய்த சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாட்டு தலைவர்களை அவசரமாக தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
அவரிடம் சீனா, ரஷ்யா நாட்டு தலைவர்கள் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதாக உறுதி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் இதுவரை தனது கருத்தை வெளியிடாததால் ஈழத் தமிழர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐ.நா. சபையில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு பிரான்ஸ், நார்வே, கனடா உள்பட 22 நாடுகள் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளன. தாங்கள் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவு திரட்டி வருகிறது.
இதில் ஏராளமான நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதாக உறுதி அளித்துள்ளன. 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும் என நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், சீமான் போன்ற தமிழக தலைவர்களும் இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆனால் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என்று மத்திய அரசு குழப்பத்தில் உள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறுகையில் ''இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை'' என்றார்.
Post a Comment